Sun. Dec 22nd, 2024

கிணற்றில் விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தின் கிகிர்டா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலை ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்பவர் கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுக்க கிணற்றில் இறங்கியுள்ளார். பின்னர் லேசான மயக்கம் வருவது போல உணர்ந்த அவர் அருகில் இருந்த குடும்ப உறுப்பினர்களை உதவிக்காக அழைத்துள்ளார். இதையடுத்து ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திர படேல் ஆகிய 3 பேரும் அவரை காப்பாற்ற கிணற்றில் இறங்கி அவர்களும் மயக்கம் அடைந்தனர். உள்ளே சென்ற 4 பேரும் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால், சந்திரா என்பவரும் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால் அவரும் மயக்கமடைந்தார்.

இதனை தொடர்ந்து உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் கிணற்றில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிணற்றுக்குள் விஷ வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *