Sun. Dec 22nd, 2024

தஞ்சை அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் 3 பெண்கள் உள்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக நடந்து சென்ற பக்தர்கள் மீது மோதியது.

இதில் பாதயாத்திரை சென்ற முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *