விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனி மாத பிரதோஷம், அமாவாசயை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந் தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று ஆனி மாத அமாவாசையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்னர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகா லிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவ லர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தாணிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்டத்திற்கு ஏற்றவாறு மருத்துவக் குழுவினர் இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் அவதி அடைந்தனர்.