கோவை உக்கடத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்பாக நேற்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
கோவை: சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறுதரப்பினரும் கோரிக்கை விடுத்தநிலையில், இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வுப் பணி கோவையில் நேற்று தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ஆசியஉட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யூ, தலைமைப் பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் ஆகியோர் உக்கடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மெட்ரோ ரயிலின் முதல் வழித்தடம் உக்கடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குப்புசாமி மருத்துவமனை, லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு, ஃபன்மால், ஹோப் காலேஜ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி, எம்ஜிஆர் நகர், வெங்கிட்டாபுரம், பார்க் பிளாசா, நீலாம்பூர் சந்திப்பு வரை 20.4 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் அமைகிறது.
அதேபோல, 2-வது வழித்தடம் கோவை ரயில் நிலையத்தில் தொடங்கி ராம் நகர், காந்திபுரம், கணபதி, அத்திப்பாளையம், விநாயகபுரம், சரவணம்பட்டி, விசுவாசபுரம், விஜிபி நகர் என 14.4 கி.மீ. தொலைவுக்கு சத்தி சாலையில் அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.