தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மன்னப்பன் குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் வீரக்குமார்(வயது 33). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதாவும் (30) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீரக்குமார் தட்டு வண்டி ஓட்டி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
வீரக்குமாருக்கும் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர்களுக்கு இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ரஞ்சிதா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று மதியம் 2 மணி அளவில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை ரோட்டு பகுதியில் ரஞ்சிதாவும், அவருடைய தாய் சாந்தியும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வீரக்குமாருக்கும், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தி ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வீரக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் சாந்தியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சாந்தியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சிதா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறில், நடுரோட்டில் வைத்து மாமியாரை மருமகன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.